Sunday, September 23, 2012

வாடகைவீடு

வாடகைக் குடித்தனக்காரர்களின் 
வாழ்க்கை கொஞ்சம் 
நாடகத்தனமானது ......

நிரந்தரமில்லாத விலாசங்களை 
தன்னுடயதாய் நம்பிக் 
கொண்டிருப்பதின் நியாயம் 
யாருக்கும் புரியாதது ......

கொடுக்க முடிந்த 
வாடகையில் கிடைக்கும் 
வீட்டில் குடியேறவேண்டும் ......

விருப்பம் இருக்கிறதோ 
இல்லையோ வாழ்கிற 
வீட்டை நேசித்தே 
ஆகவேண்டும் .....

வீட்டுக்காரரைப் பார்க்கும் 
போதெல்லாம் பணிவாய் 
அளவாய் சிரிக்கவேண்டும் .....

வாடகைத்தேதி தவறிவிட்டால் 
வசவுகளை இன்முகத்துடன் 
ஏற்கவேண்டும் ......

சிரிப்பதோ அழுவதோ 
சத்தமில்லாமல் இருப்பது 
உத்தமம் .....

உறவினர்கள் வருகையும் 
கூட அவசர சிகிச்சைப்பிரிவு 
மனநிலையை தரலாம் ...

கோபத்தில் கதவை 
அறைவதோ குண்டா 
உருட்டுவதோ என்றைக்கோ 
கிடைக்கும் விசேச அனுமதி ........

ஆசையாய் வளர்த்த 
பூச்செடிகூட அடுத்த 
நகர்விற்கு உடன்வரும் 
என்பது உறுதியாய் 
இருக்காது .....

நேசித்த .....,
முத்தம் பதித்த .....,
இன்பம் பரப்பிய .....,
இல்லங்களிலிருந்து எப்போது 
வேண்டுமானாலும் துரத்தபடலாம்...

சுவற்றில் மாட்டப்படும் 
படங்களிலிருந்து , சுவற்றை 
நிரப்பும் வர்ணங்கள் வரை  
சுயமாய் தீர்மானிக்கமுடியாது .....

மரங்களின் நிழல்கள் 
நெகிழ்ச்சியை தரலாம் ,
மட்டைகள் உடைத்த 
ஓடுகள் மழைநாளில் 
நித்திரை கெடுக்கலாம் ...

குளியலறை கீதங்கள் 
தடைசெய்யப்பட்ட 
குடித்தனங்களும் 
உண்டு...

கட்டுப்பாடுகள் காறி 
உமிழும்   எச்சில் சுவாசங்களின் 
வழியே வாழ்க்கை நகர்கிறது .......

கடிகாரங்களும் காலண்டர்களும் 
நிர்ணயிக்கும் வாழ்கையின் 
அரசியலில் நான் 
உணர்ந்து கொண்டது ,
வாடகைவீடு என்பது 
"ஒரு கவுரவ சிறைக்கூடம் "  
என்பதன்றி வேறு 
ஒரு பதமுமில்லை ......

Friday, March 30, 2012

அமைதியின் பேரிரைச்சல்


















நேசிப்பிற்குரியவளுக்கு ,

யாருமற்று தனிமையில் 
திக்குமுக்காடும் காலங்களில் 
நேசிப்பின் படிமமாய் 
எழுதப்படும் கடிதங்களே 
துணையாகின்றன .......

அன்பின் பெருக்கோடு 
எழுதப்பட்ட பாமரக் கடிதங்களின் 
வீரியத்தில் அழகியல் ததும்ப 
எழுதப்பட்ட இலக்கியகடிதங்கள் 
தற்கொலை செய்துகொள்கின்றன ....

ஒரு தேர்ந்த சிற்பியின் 
நேர்த்தியோடு இந்த கணங்களைச் 
செதுக்குகிறேன் ....

வெறுமையின் தினசரி 
குறிப்புகளோடு வாழ்கை
நகர்கிறது ..... 

அமைதியின் பேரிரைச்சல் 
மரணிப்பதற்கான ஆயத்தங்களை 
செய்கிறது .....

வாழ்வதற்கான எளியவழிகளின் 
கதவுகள் என்னால் முன்னமே 
அடைக்கப்பட்டுவிட்டன .....

அடுத்த கணங்கள் 
விபரீதங்களை எதிர்நோக்கியதாய்
 உள்ளது ...

அழகான இரவுப்பொழுதுகள்
அச்சப்பெருக்கில் நிரம்பி 
வழிகிறது .....

எதைக் கைகொள்வது ?
எதைக் கைவிடுவதென 
புரியாத அறிவுத்தேக்கம் 
நீள்கிறது .....

சமகால போராட்டங்களில் 
எந்தவித முன்னெடுப்புமின்றி 
மூளை முடங்கிக் கிடக்கிறது ....   

சார்பற்று இருப்பதன் 
குரூரம் இதயத்தை 
பிழிகிறது ....

அடுத்தவரின் குற்றங்களை 
சுட்டத்துடிக்கும் விரல்கள் 
கடந்தகாலத் தவறுகளை 
நியாபகப்படுத்துகிறது .....

என் சொந்த மிருகங்களின் 
குதறல்கள் என் 
நேர்மையை சோதித்துக்கொண்டு
இருக்கிறது .....

கவிஞர்களும் எழுத்தாளர்களும் 
மகிழ்ச்சியின் கள்ளசாவிகளை 
கண்முன்னே நீட்டி 
நிற்கிறார்கள் ....

முகம் தெரியாதவர்களின் 
சிநேகப் பார்வைகளும் 
நலம் விசாரிப்புகளும்தான் 
இருப்பை உறுதிசெய்கின்றன ....

காற்றில் அலையும் 
பறவையின் சிறகாய்
வாழ்கை துன்புறுகிறது ...


எனினும் ....,
 எப்படியாவது வாழ்ந்து 
தீர்ப்பது என்ற ஆவல், 
கருணையற்ற பெருங்கனவின் 
துரத்தலோடு வாழ  
பணிக்கிறது  .....

Saturday, March 17, 2012

நேசிப்பிற்குரியவளுக்கு ...


யாரோ யாருக்கோ 
எழுதிய கடிதத்தின் 
பழைய நாற்றம் 
தரும் போதையில் 
இன்றைய கடிதங்கள் 
பிறக்கின்றன ....  

துரோகத்தின் மூச்சுகள் 
நெறுக்கித் தள்ளும் 
தனிமையின் காலங்கள் 
இவை ....

புறக்கணிப்பின் பின்னே 
நிழல்களாய் படர்கிறது 
நேற்றைய நட்பு .....

அவதூறுகளின் வழியே 
ஆங்கே பிரிகிறது
நிகழ்கால தோழமை ....

தூங்காத இரவுகள் 
தேங்கி நிற்கிறது 
நேற்றைய நிகழ்வுகளின்
எச்சமாய் .....

யாரும் கல்லெரியாதீர் ,
உங்களின் புரையோடிய 
நட்பை நியாபகப்படுத்தலாம்.....   

எஞ்சிய  கோப்பைத் தேநீரும் 
சாம்பல் தட்டப்படாத சிகரெட்டும் 
மௌனித்திருக்கும் அறையை 
மேலும் மௌனமாக்கலாம் ....

நட்பை சிலாகித்து 
பேசிய வசனங்களும் 
கவிதைகளும் கண்களை 
மேலும் ஈரப்படுத்தலாம் ....

சகித்துக் கொள்வதென்ற 
சாக்கடையில் உழலும் 
சிநேகங்கள்  பிரிவின் 
பின்னாவது நறுமணம் 
பரப்பட்டும் .....  

அன்பு என்பது 
அதிகாரம் செலுத்துவதற்க்கே
என்ற சமூகக் கட்டமைப்பின் 
துருபிடித்த அஸ்திவாரங்கள் 
நம் அதிகாரப் போட்டியிலாவது 
ஆட்டம் காணட்டும் ....

இனியாவது ,
இணைதல் என்ற 
செயலின் தொடக்கத்திலேயே 
பிரிவென்பதும் ,அதற்க்கான 
காரணங்களும்  உற்பத்தி 
செய்யப்படட்டும் ....

இறுதியாய் ,
துரோகங்களையும், பிரிவுகளையும் 
எதிர்நோக்கிய சந்தேகங்களோடு 
பயணிக்கிறது புதியநட்பு .....

-மகி தம்பி ....

Sunday, April 10, 2011

நேசிப்பிற்குரியவளுக்கு ..


நான் ,
இதுவரை யாருக்கும் 
கடிதம் எழுதியதில்லை 
யாரும் எனக்கு 
எழுதியதுமில்லை .........

ஒருவேளை இருப்பினும் 
 ஞாபகம் கொள்ளும் 
அளவிற்கு சிறந்ததுமில்லை ......

நிச்சயமாக இது -உன் 
பதிலை எதிர்பார்த்து 
எழுதப்பட்டதில்லை ....

என் எண்ணங்களை 
எந்த தடையுமில்லாமல் 
சொல்லும் உரிமையை 
இக்கடிதமே எனக்கு 
தந்துள்ளது ....

கழற்றப்பட்ட முகமூடிகளின் 
வலிகளும் நமைச்சல்களும்  
படிப்பவருக்கு  இன்பம் தரலாம்.....
எழுதியவனுக்கில்லை .....

இக்கடிதம் -ஒருவேளை 
உன்னை வந்து சேரலாம் 
இல்லையெனில் பிறிதொருநாள் 
என்னாலேயே மறுவாசிப்பிற்கு 
உட்படுத்தப்படலாம் ......
காத்திருப்புகள் ,
வாழ்கையை சுவாரஸ்யபடுத்துகிறது 
என நான் நம்பியதுண்டு ....

ஆனால் காத்திருப்புகள் 
வாழ்கையை சூன்யப்படுதுகிறது 
என்பதே என் இப்போதைய 
நம்பிக்கை .......

காதல் மனிதனை 
புனிதப்படுத்தும் இத்யாதி 
என்கிற வார்த்தை இப்போதெல்லாம் 
கேலியாகவேபடுகிறது.....
எந்த புனிதத்தையும் 
நான் அடைந்தவனில்லை....

வார்த்தைகளற்று .....
சிந்தனையற்று.....  
அடுக்கிவைக்கப்பட்ட புத்தகங்களோடு 
எனக்கே அன்னியமாயிருக்கிறேன் 
நான் .......

 எதிர்ச்சொற்களின்  அரசியலில் 
மட்டுமே வாழ்க்கை 
நகருகிறது .......  
நான் விரும்பிய 
நானே என்னால் 
வெறுப்பிற்கு உள்ளாகும்போது 
என்னை விரும்புவார் 
யாருமற்று போகட்டும் ......

மொத்தத்தில் நாளை 
என்பது எனக்காகவே 
காத்திருக்கும் ஒரு சோடி 
சப்பாத்துகளுக்கும் ,
சிகரெட்டுகளுக்கும் ஆனது 
அவ்வளவே ......

நினைவுகளோடு மட்டுமே 
வாழசபிக்கபட்ட வாழ்க்கையே 
நமக்கு விதிக்கப்பட்டுள்ளது .....

தொலைக்கப்பட்ட வார்த்தைகளின் 
தேடுதலே நம் இருப்பாய் 
மாறட்டும் .......

இப்படிக்கு ,
உன் ..........?     

Tuesday, February 15, 2011

க..... கி..... கூ.......




                                                                                                              



இந்நாள் ..
 இந்நேரம் ....
  இவ்விடம் ....
என நீயும்,நானுமாய் 
நமது சந்திப்பை 
தீர்மானித்தோம் ........

பிரிவின் ஏக்கத்தில் 
நீ இளைத்துவிட்டதாய் 
சொன்னாய் .....

நானும் நீ இல்லாத 
தைரியத்தில் சிகரெட்டுகளுக்கு 
என் உப்பிய கன்னங்களையும் 
தடித்த உடலையும் 
தட்சிணையாய் தந்ததை 
எதோ ஒரு கருமாந்திர 
நடிகனின் பாணியில் 
சொன்னேன்....

நீயும் அதுபோலவே 
ஒரு கருமாந்திர நடிகையின் 
பாணியில் திட்டுவதை 
பாசாங்கு செய்தாய்....

கலை வளர்க்கும் 
திரைப்பட நடிகர்கள் ....
தேசத்தை காக்கும் 
கிரிக்கெட் வீரர்கள் .....

ஆஸ்கார் ரகுமான் ...
காப்பி வித் அனு....
நேற்று தின்ற 
மெது வடை ....
அடுத்த வேளை
மசால் தோசை ......
பாவப்பட்ட ஏழையான 
மொபைல் நெட் வொர்க்காரனின்     
வருமானத்திற்காக வகை 
தொகையில்லாமல் என்னிடம் 
நீயும் உன்னிடம் 
நானும் அலைபேசிக்கொண்டு  
இருந்தோம் ......

பேச்சு அலுத்துபோகவே 
ஒருவழியாய் முடித்துக்கொள்ளும் 
தருவாயில் நீ ,
 உனக்கு பிடித்த 
வயலெட்நிறச் சட்டையையும் 
நீலநிற ஜீனையும் 
கே.எஸ் இஸ்ப்ரேயையும் 
 எனக்கு பரிந்துரைத்தாய்  ......

நானும் பதிலுக்கு 
 கருப்பு நிற ஜீனையும் 
பிங்க் நிற டி- சர்ட்டையும் 
ஆலைன் பெர்பியூமையும்  
உனக்கு பரிந்துரைத்தேன் .....

உனக்கு பிடித்தபடி 
நானும், எனக்கு 
பிடித்தபடி நீயும்,
காட்சிபொருட்களாய் மாறி 
அந்த நாள் .....
அந்த நேரம் ......
அந்த இடத்தில் ......
சந்திப்போம்.....
பாவம் அப்போது 
நம் காதல்தான் 
நம்மை சந்திக்கமுடியாமல் 
எங்கோ ?
நடயைகட்டியிருக்கும் ....... 



Friday, September 24, 2010

இரங்கற்பா என்ற கிறுக்கற்பா




 











சவத்தின் மேல் 
பல வண்ணகம்பளங்கள்
போர்த்தப்பட்டிருந்தது .....



மூலம் முடங்கி போய்
வர்ணங்கள் மோதிக் 
மோதிக்கொண்டிருந்தது .....


மதங்களாய் கோட்பாடுகளாய்
கொள்கைகளை நாடுகளாய்
சாதிகளாய் சாமிகளாய் 
சச்சரவிடுகிறது இழவு வீட்டுச் 
சொந்தங்கள் போல .....


அழுகை கதாபாத்திரங்கள் 
அனைவருக்கும் வழங்கப்பட்டிருந்தது 
அல்லது எடுத்துகொள்ளபட்டிருந்தது   


கண்ணீரின் மிகுதியால்
தஞ்சையில் கூட காவிரி
பெருக்கெடுத்து ஓடியதாக
ஓர் உபரித் தகவல் ....


எல்லாம் கிளிசரின் 
கண்ணீராய் காட்சிகளை 
சோகப்படுதியது....


அட யார் செத்துப்போனது ....?
சொல்லாமல் விட்டுவிட்டேனே 
செத்தது வேறுயாருமில்லை ....
நம்மில் வாயளவு மட்டுமே 
வாழ்ந்த "மனிதநேயம் 
தான்" .....   

செத்துப் போன மனிதநேயத்தை
எந்த மதமுறையில்,
சாதி முறையில் ,
உட்சாதிமுறையில்,
குல கோத்திர   முறையில் ,
அடக்கம் செய்வதென்ற 
சண்டையில் எத்தனைபேர் 
செத்தார்களென்று   செஞ்ச்சிலுவை
சங்கம் கணக்கெடுத்துவருகிறதாம் .....

இதை பேச்சுவார்த்தையின்
மூலம் தீர்க்க .நா 
அவசரகூட்டதை இன்னும் 
ஆறுநாட்களில் கூட்டப் 
போகிறதாம் ......

முடிவு சவத்தை  கூறு 
போடுவதாய்தான் இருக்கும் ....
தலை யாருக்கு? ,கையாருக்கு?
எனச் சண்டை வராமல் 
இருந்தால் சரிதான் .....

விரிந்து பரவவேண்டிய 
ஒளி குறுகி குறுகி 
சுருங்கிக்கிடக்கிறது   .....


உலககிற்கு
பொதுவான சூரியன்
நாடுகளில் அடைக்கப்பட்டு ,
மாநிலங்களில் சிறைபிடிக்கப்பட்டு,
நகரங்களில் அபகரிக்கப்பட்டு,
குடும்பங்களில் கைக்கொள்ளப்பட்டு,
தனிமனிதனில் படிமமாகி கிடக்கிறது  
வருங்கால சந்ததிகளின்
தொல் ஆராய்ச்சிக்கு  .....

 மனிதன் தன்னை மட்டும்
நேசிக்கிறான் - தன்னை மட்டும்
பாதுகாக்கிறான் ....
தனக்காகவே வாழ்கிறான் 
அல்லது  வாழ நிர்பந்திக்கப்படுகிறான் 
அல்லது வாழுமாறு அவன் 
ஆளுமை வளர்க்கப்படுகிறது ...

உனக்காகவே வாழ் 
என்பது தற்போதைய 
வாழ்வியல் மேதைகளின் 
போதனைக் கூப்பாடு ...

இந்த சமூகத்தில்
பொதுநலம் வேண்டாத
புரட்சியாய்படும்....

மானுடத்திற்கு 
சிந்திப்பவன் பைத்தியகாரனாகி
கல்லடிபடுவான் ....



சராசரி அன்புகூட 
பத்திரிகை செய்திகளில் 
அதிசயமாக எழுதப்படும் ....

பலர் இதை 
சுயவிளம்பரத்திற்க்காகவே  
செய்து கூச்சலிடுவர்  ....


அப்போதும் என்னை போன்ற
பிழைக்கத்தெரியாத கவிகள்
இரங்கற்பா எழுதிகொண்டிருப்பர் 
மனிதநேயம் செத்துபோனதென்று ....